‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் உயரிய நூலினை இயற்றிய தமிழறிஞர் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் தமிழ்ப் பணியை போற்றும் வகையில் அவரின் 200ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்தநாளான மேத் திங்கள் 7ஆம் நாளன்று ஆண்டுதோறும் மாலை அணிவித்து சிறப்புச் செய்யப்படும் என்று 2014ஆம் ஆண்டு மாண்புமிகு மேனாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்கள். அதன்படி, ஆண்டுதோறும் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அவரது 205ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 2019 மேத் திங்கள் 7ஆம் நாள், செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை காமராசர் சாலையில் (மெரினா கடற்கரை) அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மாலை அணிவித்துச் சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், செய்தித்துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், தமிழ் வளர்ச்சி கூடுதல் செயலாளர் திருமதி க.அன்னை, மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் திரு. ந.அருள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்