தமிழை வளர்த்தல் ஒன்று: சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்துத் தந்தவர் புரட்சிக் கவிஞர் அவர்கள். மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம்தான் புரட்சிக் கவிஞர். 1929ஆம் ஆண்டே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை பாவேந்தரின் பாடல்கள்தான். அத்தகைய பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்று புகழ்ந்து பேசினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எங்கே, எப்பொழுது பேசினாலும் அதிலே புரட்சிக் கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக்கொண்டேயிருக்கும். 1990ஆம் ஆண்டு பாவேந்தரின் படைப்புக்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நாட்டுடைமையாக்கினார்கள். இன விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை, பழமைவாதம் ஒழிப்பு என்று பாவேந்தர் தன் எழுத்துக்லை திராவிட இனத்திற்கு கொள்கைப் பட்டயமாக உருவாக்கித் தந்தவராவார். இன்றும் தனது எழுத்து வரிகளால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வரிகளை மேற்கோள் காட்டிப் பேசாத பேச்சாளர்களே இல்லை. அவரது வரிகளை எடுத்தாளாத எழுத்தாளர்களே இல்லை. அவரால் உணர்ச்சிப் பெறாத தமிழர்களே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் தமிழர் தம் உணர்விலும், குருதியிலும் கலந்தவர் புரட்சிக் கவிஞர் அவர்கள். அவரை எந்நாளும் தமிழினம் வணங்கிப் போற்றும்.
பாவேந்தரின் கவிதைகளில் இனிய இசை நயம் உண்டு; அவை உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சி புயல்வீசும்; எளிமையான சொற்களில் மூலமாக வலிமையான கருத்துக்களைச் சொன்னார். எளிய சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும் ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகிவிடும். எனவேதான்,
அவரது கருத்துக்கள் கவிதைகளாக தனது வாழ்நாளில் பல இளையவர்களை கவிஞர்களாகக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இத்தகைய சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, 29.04.2025 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30.04.2025 (புதன்கிழமை) ஆகிய இரண்டு நாள்களில் “தமிழ் வார விழா” கொண்டாடப்படவுள்ளது. முதல் நாள் நிகழ்ச்சியாக 29.04.2025 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு அடையாறு, முத்தமிழ்ப் பேரவை, டி.என். இராஜரத்தினம் கலை அரங்கத்தில் மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் விழாப் பேருரையும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே என்ற தலைப்பில் பல்வேறு சமூக ஊடகங்களின் வாயிலாக நடத்தப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி தலைமையுரையும் ஆற்றவுள்ளனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.வே.இராஜாராமன், இ.ஆ.ப. அவர்கள் வரவேற்புரையும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் நன்றியுரையும் ஆற்றவுள்ளனர்.
அவர்களின் புலவர் செந்தலை ந.கவுதமன் தலைமையில் “எல்லார்க்கும் எல்லாம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் பேராசிரியர் அரங்க. இராமலிங்கம், முதுமுனைவர் அரங்க.பாரி, திரு.கோவி.லெனின், முனைவர் வாணி அறிவாளன் ஆகியோர் கருத்துரையாற்றவுள்ளனர்.