செய்திகள்

தமிழ் வளர்ச்சித் துறையில் மகளிரின் பெரும் பங்கு!

தமிழ் வளர்ச்சித் துறையில் மகளிரின் பெரும் பங்கு!

மங்கையராகப் பிறப்பெடுத்துள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் நாள் வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண், இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் பெண்களே அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர்.

மேலும் இத்துறையின் திட்டங்களை செயற்படுத்திட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட மகளிர் அனைவரும் அல்லும் பகலும் அயராது உழைத்து அனைத்து நிலைகளிலும் துறையை உயர்த்தி வருகின்றனர்.

தமிழ் வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகள்

கனவு இல்லம்: முத்தமிழறிஞர் கலைஞர்
அவர்களின் 97ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கனவு இல்லத் திட்டம்’ அறிவிக்கப்பட்டது.

இவ்வறிவிப்பின்படி, சாகித்திய அகாடமி விருது. ஞானபீட விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது மற்றும் உலக அளவிலான நோபல் பரிசு
(தமிழ் இலக்கியத்திற்கு) ஆகிய விருதுகளில் எவற்றையேனும் பெற்ற, பெறும் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழ்நாட்டிற்குள் வீடு வழங்கப்படும்

மாணவர்களுக்கான திட்டங்கள்

குறள் பரிசு:

இத்திட்டம் முத்தமிழறிஞர்
கலைஞர் அவர்களால் 2000 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவ / மாணவியர்கள் 70 பேருக்கு ரூ.10,000/- குறள் பரிசுத் தொகை யாகவும் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத்தொகை 2022-2023 ஆம் ஆண்டுமுதல்
ரூ.10,000/- த்திலிருந்து ரூ.15,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி /கல்லூரி மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்:

மாணவப் பருவத்திலேயே தமிழில் பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும், கவிதை எழுதும் திறனையும் வளர்க்கவும், தமிழ்ப்பற்றை மேம்படுத்தவும் நோக்கிலும் ஆண்டுதோறும்
பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்றுப் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தலைவர்களின் பிறந்த நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி நடத்துதல்.

“நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான
மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும் அவர்களது பிறந்தநாளில் மாவட்ட அளவில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

பேச்சுப் போட்டியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்காகத் தனியே சிறப்புப்பரிசு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நாள் விழாப் போட்டிகள்
(2019 ஆம் ஆண்டு முதல்): தமிழ்நாடுநாள் விழாவின் ஒர்
அங்கமாக அனைத்து (38) மாவட்டங்களிலும் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்று
இவற்றில் மாவட்ட / மாநில அளவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 18 ஆம் நாளன்று தமிழ் வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்ட தமிழ்நாடுநாள் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

திறனறித் தேர்வு
(2022 ஆம் ஆண்டு முதல்) “பள்ளி மாணவ, மாணவியர்கள் தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழில் ‘திறனறி தேர்வு’ நடத்தப்படும்.

இத்தேர்வின் மூலம் ஆண்டுதோறும் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பெற்று அவர்களுக்கு மாதம் ரூ.1500/- வீதம் 22 திங்கள்களுக்கு வழங்கப்பெறும் என்ற அறிவிப்பிற்கிணங்க2023-2024 ஆம் ஆண்டிற்கான திறனறித் தேர்வு 15.10.2023 அன்று அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 2,20,880 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

கையெழுத்துப் போட்டி
(2022 ஆம் ஆண்டு முதல்):

“பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுள் தமிழ்மொழியை அழகாக எழுதுபவர்களை ஊக்குவிக்கவும், இதன்வழியாகப் பிற மாணவர்களுக்கும் தமிழில் அழகாக எழுதும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ்க் கையெழுத்துப் போட்டிகள் நடத்துவதற்காக ரூ.8,36,000/- செலவில் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வி இயக்ககத்தாலும், ரூ.8,36,000/- செலவில் கல்லூரி மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி இயக்ககத்தாலும் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

இலக்கிய வினாடி வினா:

தமிழ் வளர்ச்சித் துறை மாணவர்களுக்காக நடத்தும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப்பட்டறையில் தமிழ் இலக்கிய வினாடி-வினாப் போட்டி நடத்தப்பெறும்.

இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000/- வீதம் மூன்று பேருக்கும், இரண்டாம் பரிசாக ரூ.3000/- வீதம் மூன்று பேருக்கும், மூன்றாம் பரிசாக ரூ.2000/- வீதம் மூன்று பேருக்கும் வழங்கப் பெறுகின்றன.

மாணவர்களுக்கான பயிற்சிகள்

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப்பட்டறை (2012 முதல்):

தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பெறும் இலக்கியப்போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்கள் 200 பேருக்குப் பல்துறை வல்லுநர்களைக் கொண்டு இப்பயிற்சிப் பட்டறை ஒரு வார காலம் நடத்தப் பெறுகிறது.

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை (2023 முதல்):

தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக இளையோர் இலக்கியப் பயிற்சிப்பாசறை என்றதொரு நிகழ்வைத் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களிலும் நடத்த ஒரு மாவட்டத்திற்கு
ரூபாய் 1 இலட்சம் வீதமும் 38 மாவட்டங்களுக்கு ரூ.38 இலட்சம் நிதியொப்பளிப்பு செய்யப்பட்டு ஒவ்வொரு
மாவட்டமாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இலக்கியப் பணிகள்

நூல்கள் நாட்டுடைமை:

தமிழறிஞர்களின்
படைப்புகள் மலிவு விலையில் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகின்றன.

சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு தனித்துவம் மிக்க நம் தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த படைப்புகளை அளித்த நூலாசிரியர்களுக்கும் அவற்றை வெளியிடும் பதிப்பகத்தாரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன..

தமிழ் வளர்ச்சிக்கான நூல் வெளியிட நிதியுதவித் திட்டம்

(சிறந்த நூல்கள் / அரிய நூல்கள்/ மொழிபெயர்ப்பு நூல்கள்)

சிறந்த நூல்களை வெளியிடுவதற்கான நிதியுதவி திட்டம் 1966ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படுகிறது.

சிறந்த நூல்களை வெளியிடுவதற்கும், அரிய நூல்களை மறுபதிப்பாக அச்சிடுவதற்கும் அதேபோன்று பிறமொழி நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கும், ஆய்வு நூல்களுக்கும் என நூலின் சிறப்புத் தன்மையைப் பொறுத்து ஆகும் செலவினம் எழுதுபொருள் அச்சுத்துறையால் மதிப்பீடு செய்து நூல் அச்சிட்டு வெளியிட அரசால் உச்ச அளவாக ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) நிதியுதவி வழங்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர்,
தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கேற்றவாறு தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் தனித்துவம் பெற்ற திட்டங்கள் பலவற்றையும் சுணக்கமின்றி திறம்பட செயலாற்றிவரும் மகளிர் மணிகள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்!

மொழி பெயர்ப்பாளர் விருது

தமிழறிஞர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், தமிழ் அமைப்புகள் என 63 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளை தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் கலந்து கொண்டு தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த 63 பேருக்கு வழங்கினார்.

இந்த விழாவில் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது புலவர் தி.வே.விஜயலட்சுமி அவர்களுக்கு வழங்கப்பட்டது.