செய்திகள்

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணி

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும்
சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள
50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.2.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. சக்திபெருமாள், துணைத் தலைவர்
திரு. பி. இராகவன் மற்றும் பொதுச் செயலாளர் திரு. இரா. முகுந்தன் ஆகியோரிடம் வழங்கினார். மேலும், சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை சண்டிகர் தமிழ் மன்றத்தின் பொதுச் செயலாளர் திரு.ராஜசேகர், பொருளாளர் திரு. சிவசுப்ரமணியம், இணைப் பொருளாளர் திரு. குணசேகரன் ஆகியோரிடம் வழங்கினார்.

‘நமது தாய்மொழியான தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி, இது உலகில் வேறு எந்த இனத்துக்காவது, தாய்மொழியாக இருந்திருக்குமானால், உலகப் பொது மொழியாகவே ஆகியிருக்கும்’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் மொழியின் சிறப்பினை போற்றினார். இத்தகைய வளமிக்க மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து, தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை மெய்யாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

பல்வேறு சூழல் காரணமாக புலம் பெயர்ந்து பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் வருங்காலத் தலைமுறையினர் செம்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பையும் செம்மையையும் உணர்ந்து கொள்ளும் வகையிலும், பிற மாநிலத்தவர் தமிழ் மொழியை அறிந்து கொள்ளும் வகையிலும், பண்பாட்டு வேர்களைக் காப்பதற்காகவும் இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ்ச் சங்கங்களை தோற்றுவித்து மொழி, இலக்கியம், கலை, நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அத்தகையப் பணிகளை மேற்கொண்டு வரும் தமிழ்ச் சங்கங்களுக்கு அவர்களின் இன்றியமையாத தேவைகளுக்கேற்ப தமிழ்நாடு அரசால் தாராளமாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அடியொற்றி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியதற்கிணங்க, 2024-2025-ஆம் நிதியாண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில்,
“முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பொற்கரங்களால் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 1997-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட திருவள்ளுவர் கலையரங்கத்தில் தில்லி வாழ் தமிழர்களில் வழித்தோன்றல்கள் பயனுறும் வண்ணம் தமிழ் மொழிப் பயிற்சி, நடனம் மற்றும் இசை வகுப்புகள் நடத்துதல். தமிழ் சார்ந்த கலை, இலக்கிய நிகழ்ச்சிகள், தமிழிணையக் கருத்தரங்குகள் உள்ளிட்ட தமிழ் சார்ந்த நிகழ்வுகள் நடத்திட ஏதுவாக கலையரங்கத்தினைப் புனரமைத்திட தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு ரூபாய் 50 இலட்சம் வழங்கப்படும்” என்றும்,
“சண்டிகர் வாழ் தமிழர்களின் இளந்தலைமுறையினர் தமிழ் மொழியின் சிறப்பினையும் கலைப் பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தமிழ் மொழிப் பயிற்சி, ஆடற்கலை. இசைக்கலை, மற்றும் எழில் புனைவு உள்ளிட்ட நுண்கலைகளைப் பயிற்றுவிக்க ஏதுவாக சண்டிகர் தமிழ் மன்றக் கட்டட விரிவாக்கப் பணிகளுக்கு ரூபாய் 50 இலட்சம் வழங்கப்படும்” என்றும், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு 50 இலட்சம் ரூபாயும், சண்டிகர் தமிழ் மன்றத்திற்கு 50 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 1 கோடி ரூபாய் நிதி விடுவித்தும், தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து ‘அகரம் முதல் சிகரம் வரை’ திட்டத்தினை செயல்படுத்தும் வகையிலும் ஆணைகள் வெளியிடப்பட்டு, அதன்படி, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை சண்டிகர் தமிழ் மன்றத்தின் நிர்வாகிகளுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் உடனிருந்தனர்.