இன்று (07.02.2025) சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் 2023- ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பகத்தாரர்களுக்கு பரிசு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின்கீழ் 2023 ஆம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட சிறந்த நுல்களைப் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தாருக்குப்
பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் 07.02.2025 அன்று
தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக அரங்கில் வழங்கினார்.
தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக செயற்படுத்தப்படும் சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின் வாயிலாக 33 வகைப்பாடுகளில் நூல்கள் பெறப்பட்டு ஒவ்வொரு நூலையும் மூன்று அறிஞர்களைக் கொண்டு மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகள் தெரிவு செய்யப்படுகின்றன.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் இவ்வகையில் தெரிவு செய்யப்பெற்ற நூலை எழுதிய நூலாசிரியருக்கு ரூ.30,000/-மும் அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ.10,000/-மும் என்று தொகை உயர்த்தப்பட்டு 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பெற்று வருகிறது.
முத்தமிழறிஞர் கலைஞரின் அடியொற்றி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 24.06.2024ஆம் நாளன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறை மானியக்கோரிக்கையின் போது மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் சிறந்த நூலை எழுதிய நூலாசிரியருக்கு
ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து ரூபாய் 50 ஆயிரமாகவும் பதிப்பகத்தாருக்கு
ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாகவும் பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படும்”. என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பினை செயற்படுத்தும் வகையில் 2023-ஆம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பெற்ற சிறந்த நூலை எழுதிய நூலாசிரியருக்கும் அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்திற்கும் உயர்த்தப்பட்ட வகையில் பரிசுத்தொகை வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2023-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்று சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின்கீழ் சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்ட
1 மரபுக் கவிதை எனும் வகைப்பாட்டில் வேலுநாச்சியார் காவியம் எனும் நூலை எழுதிய திரு. புதுகை வெற்றிவேலன் அவர்களுக்கும் பதிப்பித்த அருண் பதிப்பகத்தாருக்கும்,
2 புதுக் கவிதை எனும் வகைப்பாட்டில் இதயக்கனல் ஈன்ற குழந்தை எனும் நூலை எழுதிய திரு. என்.எஸ்.கலைவரதன் அவர்களுக்கும் பதிப்பித்த செல்வகமலம் பதிப்பகத்தாருக்கும்
3 புதினம் எனும் வகைப்பாட்டில் அடையாற்றுக்கரை எனும் நூலை எழுதிய திரு. மு.து.பிரபாகரன் அவர்களுக்கும் பதிப்பித்த டிஸ்கவரி பதிப்பகத்தாருக்கும்,
4 சிறுகதை எனும் வகைப்பாட்டில் தாமரையும் அருக்காணியும் எனும் நூலை எழுதிய திரு. சந்துரு மாணிக்கவாசகம் அவர்களுக்கும் பதிப்பித்த தமிழ் வெளி பதிப்பகத்தாருக்கும்,
5 நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் அர்ஜுனன் மகன் அரவான்களப்பலி எனும் நூலை எழுதிய
திரு. கா. பாலகங்காதரன் அவர்களுக்கும் பதிப்பித்த டி.கே பதிப்பகத்தாருக்கும்,
6 சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் முத்தமிழறிஞரின் முத்து மொழிக்கதைகள் எனும் நூலை எழுதிய செல்வி ஹரிவர்ஷ்னி ராஜேஷ் அவர்களுக்கும் பதிப்பித்த மகேஸ்வரி பதிப்பகத்தாருக்கும்,
7 திறனாய்வு எனும் வகைப்பாட்டில் வாசக நோக்கில் நம் கால மகாகவி எனும் நூலை எழுதிய
திரு. தி.அமிர்த கணேசன் அவர்களுக்கும் பதிப்பித்த ஒரு துளிக் கவிதை பதிப்பகத்தாருக்கும்,
8 மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி இலக்கணம் எனும் வகைப்பாட்டில்
மரபுக்கவிதை எழுதலாம் எனும் நூலை எழுதிய முனைவர் சொற்கோ இரா. கருணாநிதி அவர்களுக்கும் பதிப்பித்த இராஜா பதிப்பகத்தாருக்கும்,
9 பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் கலைஞர் மு.கருணாநிதி வரலாறு எனும் நூலை எழுதிய திரு. சந்தியா நடராஜன் அவர்களுக்கும் பதிப்பித்த வ.உ.சி பதிப்பகத்தாருக்கும்,
10 நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் இனக்குழுச் சமூகமும் இசையும் எனும் நூலை எழுதிய திரு. வே.கண்ணதாசன் அவர்களுக்கும் பதிப்பித்த பரிசல் பதிப்பகத்தாருக்கும்,
11 அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பழங்குறியீடுகள் கலைக்களஞ்சியம் எனும் நூலை எழுதிய திரு. சு. சிவா அவர்களுக்கும் பதிப்பித்த காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும்,
12 பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் மனம் மறக்கா அமெரிக்கா எனும் நூலை எழுதிய பேராசிரியர் முனைவர் ஹாஜாகனி அவர்களுக்கும் பதிப்பித்த நன்னூல் பதிப்பகத்தாருக்கும்,
13 வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் தமிழ்ச் சமயச்சான்றோர் தணிகை மணி வ.சு.செங்கல்வராய பிள்ளை எனும் நூலை எழுதிய திரு. பா. எழில் செல்வன் அவர்களுக்கும் பதிப்பித்த சிவாலயம்
பதிப்பகத்தாருக்கும்,
14 நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் சோழர்கள் இன்று எனும் நூலை எழுதிய திரு. சமஸ் அவர்களுக்கும் பதிப்பித்த தாமரை பிரதர்ஸ் பதிப்பகத்தாருக்கும்,
15 கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் எனும் வகைப்பாட்டில் தமிழர் காலக் கணிதம் எனும் நூலை எழுதிய திரு. பெ.கணேசன் அவர்களுக்கும் பதிப்பித்த பொதிகை மைந்தன் பதிப்பகத்தாருக்கும்,
16 பொறியியல், தொழில் நுட்பவியல் எனும் வகைப்பாட்டில் சொல்லித் தெரிவதில்லை கட்டிடக்கலை எனும் நூலை எழுதிய திரு. இ. உதயகுமார் அவர்களுக்கும் பதிப்பித்த பிராம்ப்ட் பதிப்பகத்தாருக்கும்,
17 மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் எனும் வகைப்பாட்டில் ஜவ்வாதுமலை வாழ்வும் வரலாறும் எனும் நூலை எழுதிய திரு. க. ஜெய்சங்கர் அவர்களுக்கும் பதிப்பித்த வசந்தவேல் பதிப்பகத்தாருக்கும்,
18 சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பிரிவினையின் பெருந்துயரம் எனும் நூலை எழுதிய திரு. சு. இராமசாமி அவர்களுக்கும் பதிப்பித்த சுவாசம் பதிப்பகத்தாருக்கும்,
19 பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் இந்தியப் பொருளாதாரம் அம்பேத்கரியப் பார்வை எனும் நூலை எழுதிய திரு. மு. நீலகண்டன் அவர்களுக்கும் பதிப்பித்த புரட்சி பாரதி பதிப்பகத்தாருக்கும்,
20 மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் “நமது மூளை – நமது எதிர்காலம்” எனும் நூலை எழுதிய மு.அ.அலீம் அவர்களுக்கும் பதிப்பித்த எழுத்து பதிப்பகத்தாருக்கும்,
21 தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) எனும் வகைப்பாட்டில் நல்வாழ்விற்கு சித்த மருத்துவம் எனும் நூலை எழுதிய மருத்துவர் மானக்சா அவர்களுக்கும் பதிப்பித்த ஸ்ரீசெண்பகா பதிப்பகத்தாருக்கும்,
22 சமயம், ஆன்மிகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் கம்பனும் வைணவமும் எனும் நூலை எழுதிய
திரு. ந. செல்லக்கிருஷ்ணன் அவர்களுக்கும் பதிப்பித்த கபிலன் பதிப்பகத்தாருக்கும்,
23 கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் பல்வகை நுண்ணறிவுகள் எனும் நூலை எழுதிய திரு. ச. வின்சென்ட் அவர்களுக்கும் பதிப்பித்த எதிர் வெளியீடு பதிப்பகத்தாருக்கும்,
24 வேளாண்மையியல், கால்நடையியல் எனும் வகைப்பாட்டில் “பாரம்பரிய இயற்கை வேளாண்மை பாகம்-1” எனும் நூலை எழுதிய முனைவர் அருணா தொல்காப்பியன் அவர்களுக்கும் பதிப்பித்த அருணா பதிப்பகத்தாருக்கும்,
25 சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் எனும் நூலை எழுதிய திரு. சந்துரு அவர்களுக்கும் பதிப்பித்த கிழக்குப் பதிப்பகத்தாருக்கும்,
26 கணினியியல் எனும் வகைப்பாட்டில் செகம் புகழும் செயற்கை நுண்ணறிவு எனும் நூலை எழுதிய திரு. ப. குணசேகர் அவர்களுக்கும் பதிப்பித்த பண்புப் பதிப்பகத்தாருக்கும்,
27 நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் சிலப்பதிகாரம் நாட்டுப்புறவியல் நோக்கு எனும் நூலை எழுதிய திரு. பெ. சுப்பிரமணியன் அவர்களுக்கும் பதிப்பித்த காவ்யா பதிப்பகத்தாருக்கும்,
28 வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் நிரல்மொழி எனும் நூலை எழுதிய திருமதி காதம்பரி அவர்களுக்கும் பதிப்பித்த இலக்கியப் படைப்பு குழுமம் பதிப்பகத்தாருக்கும்,
29 இதழியல், தகவல் தொடர்பு எனும் வகைப்பாட்டில் நலவாழ்வு நம் கைகளில் எனும் நூலை எழுதிய மருத்துவர் அ. வேணி அவர்களுக்கும் பதிப்பித்த சிவாவேணி பதிப்பகத்தாருக்கும்,
30 பிறசிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் மெய்ப்பாடுகள் (வாழ்வனுபவக் கட்டுரைகள்) எனும் நூலை எழுதிய திரு. இரா. திருப்பதி வெங்கடசாமி அவர்களுக்கும் பதிப்பித்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தாருக்கும்,
31 விளையாட்டு எனும் வகைப்பாட்டில் தமிழ் மண் தந்த விளையாட்டுகள் எனும் நூலை எழுதிய திரு. மா.க. சுப்ரமணியன் அவர்களுக்கும் பதிப்பித்த சு. சாந்தி, செந்தில் நாதன் பதிப்பகத்தாருக்கும்,
32 மகளிர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் தண்டனைக் களமாகும் பெண்ணுடல் எனும் நூலை எழுதிய திருமதி சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கும் பதிப்பித்த ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்தாருக்கும்,
33 தமிழர் வாழ்வியல் எனும் வகைப்பாட்டில் தமிழ் மலையாளப் பண்பாட்டு ஒப்பீடு எனும் நூலை எழுதிய திரு. ப. ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கும் பதிப்பித்த சாரதா பதிப்பகத்தாருக்கும்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் 07.02.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் சென்னை, அடையாறு, இராஜா அண்ணாமலைபுரம், பசுமை வழிச் சாலை (இசைக் கல்லூரிச் சாலை)யில், உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு. வே. ராஜாராமன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் உயர்த்தப்பட்ட வீதத்தில் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.