செய்திகள்

உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழின் மிகச் சிறந்த நூல்கள் 100

உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழின் மிகச் சிறந்த நூல்கள் 100 பல்கலைக்கழகங்கள மற்றும் நூலகங்களில் இடம்பெறச் செய்தல் தொடர்பான முதல்நிலைக் கூட்டம் (30.08.2024) நடைபெற்றது.

உலகிலேயே பழமையான மொழிகள் எனக் கருதப்படும் தமிழ், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், சீனம் மற்றும் வடமொழி ஆகிய மொழிகளுள் சிதையாத மொழியாக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையில் புதுப்பித்து வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ் மொழியாகும்.

தமிழ்மொழியின் சிறப்புகளை நுண்ணாய்ந்து บด அறிஞர்கள் தமிழ் மொழியின் தகுதிகளை உயர்த்த வேண்டுமென்று கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டிருந்த வேளையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் செம்மாந்த சிந்தனையால் அந்நாளைய ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி செம்மொழித் தகுதியினைத் தமிழுக்குப் பெற்று வழங்கியதை தமிழ் கூறும் நல்லுலகம் நன்று அறியும்.

தமிழ்மொழியின் ஐம்பெருங்காப்பியங்களான சிறப்புமிக்க நூல்களாகக் சிலப்பதிகாரம். மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி,

ஐஞ்சிறுங்காப்பியங்கள் உதயண குமார காவியம். நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி,

சங்க இலக்கிய நூல்களான பத்துப்பாட்டு. எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,

நவீன கால நூல்களான புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், திறனாய்வுகள் உள்ளிட்ட நூல்கள் உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் பல்வேறு காலக்கட்டங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசால் தமிழ்மொழியின் சிறப்பினை உலகமெல்லாம் பரவிடச் செய்யும் வகையில் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள தமிழ் நூல்களைக் கண்டறிந்து பரப்பிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மொழிபெயர்ப்புப் பணிகளை ஆற்றிவரும் தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தமிழ் இணையக் கல்விக் கழகம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் நிறுவனம், ஒன்றிய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் போன்றவற்றின் மூலமும் தொடர்புடைய நிறுவனங்கள் / வெளியீட்டாளர்கள் / காப்புரிமையாளர்கள் / தனிநபர்கள் ஆகியோரைத் தொடர்புகொண்டு வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களை தொகுத்து, அனுமதி பெற்றும் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள் மற்றும் புகழ்பெற்ற நூலகங்களிலும் தொகுக்கப்பெற்றுள்ள மொழிபெயர்ப்பு நூல்களை இடம்பெறச் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செம்மையுற செயற்படுத்துவதற்கு வல்லுநர் குழு உறுப்பினர்களாக,

முனைவர் ம. இராசேந்திரன், மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

திரு. ந. முருகேசபாண்டியன், திறனாய்வாளர்,

எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன்,

முனைவர் க. சுந்தர், ரோஜா முத்தையா நூலகம்.

திருமதி ஆண்டாள் பிரியதர்சினி, மொழிபெயர்ப்பாளர்.

திரு. இரத்தின சபாபதி,
நியூ செஞ்சுரி புத்தக நிலையம்

ஆகியோர் அடங்கிய குழுக்கூட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் தலைமையில் 30.08.2024 வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணியளவில் தமிழ் வளர்ச்சி இயக்ககக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழிலிருந்து ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், சீனம் போன்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைத் தேர்ந்தெடுத்து 100 பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிட முடிவெடுக்கப்பட்டது.

சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியப் படைப்புகள் வரையிலான மொழிபெயர்ப்பு நூற் பட்டியலைத் தயாரித்து வலைத்தளம் உருவாக்கி பதிவேற்றம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி, தமிழிலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழர் நாகரிகம் போன்றவற்றுக்கு முன்னுரிமை தந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிறமொழி நூல்களை நூறு பல்கலைக்கழகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்புவதென ஒருமனதாக முடிவெடுத்து

இத்திட்டத்திற்கு நெறியாளராகத் திறனாய்வாளர்
திரு. ந. முருகேசபாண்டியன் அவர்களை ஒருங்கிணைக்குமாறு முடிவு
செய்யப்பட்டுள்ளது.

தமிழறிஞர்கள், திறனாய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்,
தமிழ் ஆர்வலர்கள் இத்திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் கருத்துகளைத் தமிழ் வளர்ச்சி இயக்கக அலுவலகத்தில் வழங்கலாம்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9