செய்திகள்

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய சட்டமன்றப் பேரவைச் செயலக அலுவலகத்திற்கான சுழற்கோப்பையை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள் வழங்கினார்.

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய சட்டமன்றப் பேரவைச் செயலக அலுவலகத்திற்கான சுழற்கோப்பையை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள் சட்டமன்றப் பேரவைச் செயலக அரசு முதன்மைச் செயலாளர் திரு. கி. சீனிவாசன் அவர்களிடம் இன்று (23.08.2024 வெள்ளிக்கிழமை) வழங்கினார்

தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழிச் சட்டத்திற்கிணங்க அரசின் நிருவாக மொழியாகத் தமிழ்மொழி இருந்து வருகிறது.

ஆட்சிமொழிச் சட்டத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பெற்றுள்ள அரசாணைகளின்படி, அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள்,கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிருவாக அலுவல்களில் முழுமையாகத் தமிழ்மொழியைப் பயன்படுத்திடும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் இலட்சிய இலக்கை அடைய தமிழ் வளர்ச்சித் துறையால் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன.

தமிழ் வளர்ச்சித் துறையின் தலையாயப் பணியான ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கப் பணியினை மேன்மையுறச் செய்திட, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் அவர்களால் தலைமைச் செயலகத் துறைகளிலும், தமிழ் வளர்ச்சி இயக்குநரால் துறைத் தலைமை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், அரசு நிறுவனங்கள், மாவட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகியவற்றிலும் இத்திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் / மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் / மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்கள் ஆகியோர் மாவட்ட நிலை மற்றும் சார்நிலை அலுவலகங்களில் இவ்வாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் 2022ஆம் ஆண்டிற்கான ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க ஆய்வு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலக அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவற்றுள், தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகமாக தலைமைச் செயலகச் சட்டமன்றப் பேரவைச் செயலகம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான சுழற்கோப்பையை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு.பெ. சாமிநாதன் அவர்கள் இன்று (23.08.2024 வெள்ளிக்கிழமை) சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டமன்றப் பேரவைச் செயலக அரசு முதன்மைச் செயலாளர் திரு. கி. சீனிவாசன் அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் உயர்திரு வே. இராஜாராமன் இ.ஆ.ப.,

தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஔவை அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9