தமிழ் வளர்ச்சித் துறை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தல் 15.07.2024
தனிப்பெரும் தமிழ் மாமலை மறைமலையடிகளார்
தமிழகப் புலவர் பெருமக்களுள் மறைத்திரு மறைமலையடிகளார், தனித்தமிழ்த் தந்தையாக மட்டுமின்றித் தனித்திறம் படைத்த பல்கலைப் பேரறிஞராக விளங்கினார்.
தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்த அடிகளார் சமயம், சமுதாயச் சீர்திருத்தம் நலத்துறை ஆகிய மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் துறைகளிலும் தமது அறிவாற்றலைச் செலுத்தி அரிய பல நூல்களைத் தனித்தமிழில் எழுதியும் மன்றங்களிலும், மாநாடுகளிலும் அரிய உரைகளை நிகழ்த்திய பண்பாளராகத் திகழ்ந்தவர் ஆவார்.
தமிழர்கள் அனைவரும் தூயதமிழ் பேச வேண்டும் என்ற நோக்கில்
‘தனித்தமிழ் இயக்கம்’ தொடங்கித் தமிழுக்காக செழும் பணியாற்றியவர்
மறைமலையடிகள்.
பாங்கறிந்து சொற்பொழிவுகள் ஆற்ற வல்லவர், சைவத்
திருப்பணியும் சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்த செம்மல். ‘தமிழ்க்கடல்’,
‘தனித்தமிழின் தந்தை’ என்றெல்லாம் தமிழுலகத்தால் போற்றப்பட்டவர்
மறைமலையடிகள் ஆவார்.
தவத்திரு மறைமலையடிகள் 1876ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள் நாகைப்பட்டினத்தில் பிறந்தார்.
இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பித்தவர். திராவிட மஞ்சரி, பாசுகர ஞானோதயம், நீலலோசனி, ஞானசாகரம் ஆகிய இதழ்களில் இவரின் தீஞ்சுவைக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆகிய நூல்களுக்கு ஆராய்ச்சியுரை எழுதியும் திருவொற்றியூர் முருகன் மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் முதலிய செய்யுள் நூல்களையும், சிந்தனைக் கட்டுரைகள், அறிவுரைக் கொத்து, சிறுவர்களுக்கான செந்தமிழ், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் போன்ற கட்டுரை நூல்களையும், குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள் முதலிய புதினங்களையும் எழுதியுள்ளார்.
வடமொழியில் காளிதாசர் எழுதிய சாகுந்தலத்தை மொழிபெயர்த்து சாகுந்தல நாடகம் என்ற பெயரில் நூலையும், அம்பிகாபதி அமராவதி என்ற நாடக நூலையும் எழுதியுள்ளார்.
‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ மறைமலையடிகளாரின் 148 ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு அவரைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், பல்லவபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு 15.07.2024 திங்கட்கிழமையன்று காலை 10.30 மணிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், தாம்பரம் மாநகராட்சி மேயர், தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் ஆகியோரால் மலர் வணக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டுள்ளது.
செய்தி வெளியீடு எண்: 937
நாள் : 09.07.2024
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9