சிலைகளுக்கு மாலை அணிவித்தல்

திருவள்ளுவர்

உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அளவிலாக் கருத்துகளை ஆற்றல்மிகு இரு வரிகளில் அடக்கி வைத்து உலகப் பொதுமறையாய்த் திகழும் திருக்குறளைத் தந்த செந்நாப்புலவரின் திருவுருவச் சிலைக்கு ஆண்டுதோறும் தைத்திங்கள் 2-ஆம் நாளன்று திருவள்ளுவர் திருநாளில் மலர்மாலை அணிவித்தும் மலர்தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

 தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர்

தமிழர்களின் கருவூலமான தமிழிலக்கியச் சுவடிகளைத் தேடித்தேடி ஆய்ந்தறிந்து நூலாக்கிய ஆற்றல்மிகு தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா. அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 19ஆம் நாளன்று சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு 1993-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் மாலை அணிவித்தும் மலர்தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஔவையார்

பெண்ணியத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் உலகோர் ஏத்தும் ஒப்பற்ற அறநெறிகளை வழங்கிய ஆத்திசூடியைத் தந்த, நன்னெறிகளைப் பொன் வரிகளால் வேய்ந்த, சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள பெண்பாற்புலவர் ஔவையாரின் அணிமிகு சிலைக்கு ஒவ்வோர் ஆண்டும் உலக மகளிர் நாளான மார்ச்சு 8ஆம் நாளன்று மலர்மாலை அணிவித்தும் மலர்தூவியும் 2004 ஆம் ஆண்டு முதல் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

தமிழறிஞர் கால்டுவெல்

அயல்நாட்டு அறிஞராயிருந்தும் நம்நாட்டுத் தமிழ்மொழியில் நாட்டம் கொண்டு தமிழின் தகைமையைத் தமிழருக்கு எடுத்துச் சொன்ன மாபெரும் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் தமிழ்ப்பணியைப் பெருமைப்படுத்தும் வகையில், அவரது இருநூற்றாண்டு நிறைவு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் அவரின் பிறந்த நாளான 07.05.2014 அன்று அவரின் திருவுருவச் சிலைக்குச் சிறப்புச் செய்ய அரசால் ஆணையிடப்பட்டது. இதன்படி, ஒவ்வோராண்டும் தமிழறிஞர் கால்டுவெல் அவர்களின் பிறந்த நாளான மே 7ஆம் நாளன்று சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவர்தம் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் சிறப்புச் செய்யப்பட்டு வருகிறது.

கம்பர்

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இயற்றிய கம்பராமாயணம் திருவரங்க அரங்கநாதப் பெருமாள் திருக்கோயிலில் பங்குனி மாதம் அத்த நட்சத்திரத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டதாக தனிப்பாடல் திரட்டு ஒன்றின் வாயிலாக அறியப்பட்டது.  மேலும் காரைக்குடியில் உள்ள நாட்டரசன் கோட்டையில் கம்பருக்கு மூன்று நாள்கள் இலக்கிய திருவிழாவை காரைக்குடி கம்பன் கழகத்தின் செயலாளர் கம்பன் அடிப்பொடி கணேசன் அவர்களின் தலைமையில் 24.03.1940-இல் முதன்முதலாக தமிழ்நாட்டிலேயே கம்பருக்கு ஒரு பெருவிழா எடுக்கப்பட்டது.

அதனை முன்நிகழ்வாக கொண்டு, கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு 24.03.2018ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் மாலை அணிவித்து  மலர்வணக்கம் செய்யப்பட்டுவருகிறது.

இளங்கோவடிகள்

சித்திரை மாதத்தில் அதாவது ஏப்ரல் திங்களில் 10 நாள்கள் இந்திரவிழா கொண்டாடியதற்கு சிலப்பதிகார காப்பியத்தில் சான்றுகள் உள்ளன.  எனவே, அதனை அடிப்படையாக கொண்டு,  தமிழின் முதல் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தை இயற்றிய காப்பியக் கவிஞர் இளங்கோவடிகளுக்கு அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு 24.04.2018ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் மாலை அணிவித்து  மலர்வணக்கம்  செய்யப்பட்டு வருகிறது.

தொல்காப்பியர்

இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர்.  இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சித்திரை முழுமதி நாளன்று சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கும் கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக்காட்டில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும் சித்திரை முழுமதி நாளன்று 2020ஆம் ஆண்டுமுதல்  ஆண்டுதோறும்  மாலை அணிவித்து  மலர்வணக்கம் செய்யப்பட்டுவருகிறது.

மறைமலை அடிகள்

தனித்தமிழின்மீது கொண்ட பற்றின் காரணமாக வடமொழியில் இருந்த தனது இயற்பெயரான “வேதாச்சலம்” என்பதை “மறைமலையடிகள்” என மாற்றிக்கொண்டவர்.  சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பித்தவர்.  வடமொழியில் காளிதாசர் எழுதிய சாகுந்தலத்தை மொழிபெயர்த்து சாகுந்தல நாடகம் என்ற பெயரில் நூலையும் அம்பிகாபதி – அமராவதி என்ற நாடக நூலையும் எழுதியவர்.

அயன்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசவேண்டும் என முடிவெடுத்ததன் அடிப்படையில் தனித்தமிழ் இயக்கத்தினை தோற்றுவித்ததால் “தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை” எனப் போற்றப்படும் மறைமலையடிகளின் பிறந்தநாளான சூலை 15ஆம் நாளன்று செங்கல்பட்டு மாவட்டம் பல்லவபுரத்தில் அமைந்துள்ள அவரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு 2019ஆம் ஆண்டுமுதல்  ஆண்டுதோறும்  மாலை அணிவித்து  மலர்வணக்கம் செய்யப்பட்டுவருகிறது.

திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரானார் அவர்கள் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை, உள்ளொளி, உரை நூல்கள், பெரியபுராணம் குறிப்புரையும்- வசனமும், முருகன் அல்லது அழகு,  இலங்கைச் செலவு (பயணநூல்) போன்ற அரசியல், சமுதாயம், சமயம் சார்ந்த பல நூல்கள் மற்றும் பாடல்களை எழுதியவர்.  தேசபக்தன், திராவிடன், நவசக்தி போன்ற நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியதன்மூலம் சிறந்த பத்திரிக்கையாளராகவும்  தமிழ்நாட்டில்  தொழிற்சங்கத்தைத்  தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டதன்மூலம் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர்.

இத்தகைய  சிறப்பு  வாய்ந்த   ‘தமிழ்த்தென்றல்’     திரு.வி. கலியாண சுந்தரனார்  அவர்களின்   புகழைப்   போற்றும்வகையில்    பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மதுரவாயல் வட்டத்தில் அவர் பிறந்த ஊரான துண்டலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு 2018ஆம் ஆண்டுமுதல்  அவருடைய  பிறந்தநாளான ஆகஸ்ட்  திங்கள் 26ஆம் நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டு வருகிறது.