தமிழ் வளர்ச்சித் துறை வரலாறு
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பெற்று 19.01.1957-இல் ஆளுநரின் இசைவுபெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பெற்றது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது. ஆட்சிமொழிக் குழுவின் தலைவராகத் திரு.என்.வெங்கடேசன் அவர்கள் பொறுப்பேற்றார்.
ஆட்சிமொழிக் குழுவில் கீழ்க்காண்பவர்கள் தொடர்ந்து பணியாற்றினர்.
- திரு.எஸ்.வெங்கடேசுவரன், இ.கு.ப.(1957-63)
- திரு.சி.எ. இராமகிருட்டினன், இ.கு.ப.(1963-65)
- திரு.வி. கார்த்திகேயன், இ.ஆ.ப.(1965-68)
இக்குழு தமிழகம் முழுவதிலுமுள்ள அலுவலகங்களை ஆய்வுசெய்து தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரையும், ஆட்சிமொழித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் களைய அறிவுரையும், ஆட்மொழித் திட்டச் செயலாக்கத்திற்கு உறுதுணையான ஆட்சிச்சொல் அகராதியினை வளப்படுத்துவதற்கான அறிவுரையும் வழங்கியது. 1971-ஆம் ஆண்டில் 28.05.1971 அன்று வெளியிடப்பெற்ற அரசாணையின்படி தமிழ் வளர்ச்சி இயக்ககம் என்ற புதிய துறை ஒன்று தோற்றுவிக்கப்பெற்றது. அத்துறையிடம் இப்பணிகள் அனைத்தும் ஒப்படைக்கப்பெற்றன. தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்களின் தலைமையில் தொடர்ந்து இயங்கிவருகிறது.
ஆட்சிமொழித் திட்டத் தோற்றம்
1947ஆம் ஆண்டில் இந்தியா விடுதலையடைந்ததும் நமக்கென ஆட்சிமுறை ஒன்றை அமைக்கவும். நம் நாட்டின் ஆட்சிமொழியைத் திட்டம் செய்யவும் இந்திய அரசமைப்புப் பேரவை ஒன்று நிறுவப்பெற்றது. மாநிலச் சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பெற்றோ பலரும், வேறு சிலரும் அதன் உறுப்பினர்களாக அமர்ந்தனர். திரு. இராசேந்திரபிரசாத் அதன் தலைவராவார். 1950ஆம் ஆண்டில் இப்பேரவை இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. ஆட்சிமொழியைப் பற்றி இப் பேரவையின் முடிவுகள் அரசமைப்புச் சட்டத்தின் பகுதி XVII இல் ஆட்சிமொழி என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளன.