நூல்கள் நாட்டுடைமை

மறைந்த தமிழறிஞர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் அவர்களின் படைப்புகள் பாரெங்கும் பவனி வரவேண்டும்; எளிய வகையில் அனைவரையும் சென்றடைய வேண்டும் எனும் நோக்கிலும் அவர்களின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன்படி, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையருக்குப் பரிவுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 146 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையருக்கு ரூபாய் 10.92 கோடி பரிவுத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாட்டுடைமை நூல்களை அச்சிட்டு வெளியிடும் திட்டம்

தமிழறிஞர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தமிழ் மக்களிடம் நலமுறச் சென்றடைதல் வேண்டும் எனும் நன்நோக்கில் தமிழறிஞர்களின் படைப்புகளில் ஒன்றைத் தெரிவுசெய்து ஆண்டுதோறும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வாயிலாக வெளியிடுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி ஆண்டுதோறும் ரூபாய் 20 இலட்சம் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 92 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், 66 நூல்கள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது.

நாட்டுடைமை நூல்களை இணைய தளத்தில் வெளியிடும் திட்டம்

தமிழறிஞர்களின் நூல்களில் நுவலும் நுண்ணிய கருத்துகள் உலகமெங்கும் உலாவந்து அங்கு வாழும் மக்களைச் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் இணைய தளத்தில் வெளியிடப்படுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தமிழறிஞர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட
நூல்களிலிருந்து இதுவரை 2188 நூல்கள் உருப்படம் செய்யப்பட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் வலை தளத்திலும்
(www.tamilvalarchithurai.org மற்றும்
www.tamilvalarchithurai.com) தமிழ் இணையக் கல்விக் கழக வலைத்தளத்திலும் (www.tamilvu.org) வெளியிடப்பட்டுள்ளன.