தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் நடத்தப்பெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் 100 பேரைக் கொண்டு 2012-13ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தில் ரூபாய் 10 இலட்சம் செலவில் முதன்முதலில் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பெற்றது. இத்திட்டத்தினை விரிவுபடுத்திடும் வகையில் மேலும் 100 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என 2013-14ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கண்ட வகையில் 200 மாணவர்களுக்கு ரூபாய் 20 இலட்சம் செலவில் ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஐந்து இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பெற்றுள்ளன. இப்பட்டறை வாயிலாக அவர்களின் பன்முகத் திறனை மேம்படுத்தும் வகையில் ஆர்வமுள்ள இளம் எழுத்தாளர்களுக்குக் கவிதை, கட்டுரைப் பயிற்சியும் பேச்சாளர்களுக்குப் பேச்சுப் பயிற்சியும் விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கான பயிற்சியும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ஒருவாரக் காலத்திற்கு அளிக்கப்படுகிறது.
இலக்கியத்தில் வினாடி-வினா
2019-2020ஆம் ஆண்டு இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற்ற மாணவர்களிடையே தமிழ் இலக்கிய வினாடி-வினா தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டன.