தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு, செய்தி மற்றும் விளம்பரம்,திரைப்படத் தொழில்நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்
தமிழ் வளர்ச்சித் துறை
பதிவிறக்கம் செய்ய
தமிழ் வளர்ச்சி இயக்ககம் – விருதுகள்
- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1971ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ் வளர்ச்சி இயக்ககம் வாயிலாக தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் தைத்திங்கள் 2ஆம் நாள் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படும் திருவள்ளுவர் விருது. பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகிய விருது பெறும் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருதுத் தொகை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ரூபாய் ஒரு இலட்சத்திலிருந்து ரூபாய் இரண்டு இலட்சமாக உயர்த்தப்பட்டு கடந்த மூன்றாண்டுகளில் 21 அறிஞர்களுக்கு விருது வழங்கிட மொத்தம் ரூபாய் 59.75 இலட்சம் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ஆண்டுதோறும் கபிலர் விருது, கம்பர் விருது, உ.வே.சா. விருது, சொல்லின் செல்வர் விருது, ஜியு போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, முதலமைச்சர் கணினித் தமிழ் விருது, அம்மா இலக்கிய விருது, காரைக்கால் அம்மையார் விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (10), சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது, அயோத்திதாசப் பண்டிதர் விருது, மறைமலை அடிகாளர் விருது, அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது, உலகத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக வழங்கப்படும் இலக்கிய விருது, இலக்கண விருது, மொழியியல் விருது ஆகிய விருது பெறும் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுவந்த விருதுத்தொகை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ரூபாய் ஒரு இலட்சத்திலிருந்து ரூபாய் இரண்டு இலட்சமாக உயர்த்தப்பட்டு கடந்த மூன்றாண்டுகளில் 56 அறிஞர்களுக்கு விருது வழங்கிட மொத்த தொகையாக ரூபாய் ஒரு கோடியே 46 இலட்சத்து 06 ஆயிரம் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் 38 மாவட்டங்களிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதுகள் நாளிதுவரை 76 அறிஞர்களுக்கு வழங்கிட ரூபாய் 22 இலட்சத்து 80 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் தமிழமைப்புகளை நிறுவி தமிழ்த்தொண்டாற்றும் சீரிய அமைப்புகளுக்கு தமிழ்த்தாய் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. மூன்றாண்டுகளில் ரூபாய் 12 இலட்சம் வழங்கப்பட்டது.
- திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பாக, கடந்த மூன்றாண்டுகளில் 35 இனங்களில் 254 விருதாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு விருது
- மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டினை முன்னிட்டு அவரது வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த 6 அறிஞர்களுக்கு 2021ஆம் ஆண்டில் சிறப்பு நேர்வாக வழங்கப்பட்ட பாரதி நினைவு நூற்றாண்டு விருதுக்கென ரூ.18.60 இலட்சம் வழங்கப்பட்டது.
புதிய விருதுகள்
- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 03.06.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் மூன்று அறிஞர்களுக்கு இலக்கிய மாமணி என்ற பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு விருதாளர் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.5 இலட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டு மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நேர்வாக கூடுதலாக மூன்று அறிஞர்கள் தெரிவு செய்யப்பெற்ற வகையில் மூன்றாண்டுகளில் 12 அறிஞர்களுக்கு விருது வழங்கிட ரூபாய் 61.30 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
- கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் 150ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பெயரில் புதிய விருது தோற்றுவிக்கப்பட்டு முதன் முறையாக
திரு. எண்ணரசு கருநேசன் அவர்களுக்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் வழங்கப்பட்டது. - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2021ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தகைசால் தமிழர் விருது திரு. ந. சங்கரய்யா, திரு. இரா. நல்லகண்ணு மற்றும் திரு. கி. வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பெற்றது. பொதுத் துறை வாயிலாக வழங்கப்பட்ட இவ்விருது 2024ஆம் ஆண்டுமுதல் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கிடவும் விருதுத்தொகையாக ரூபாய் 10 இலட்சம் நிதியொப்பளிப்பு செய்தும் ஆணையிடப்பட்டு 2024ஆம் ஆண்டுக்கு இலக்கியச் செல்வர் திரு. குமரி ஆனந்தன் அவர்களுக்கு விடுதலைத் திருநாள் அன்று வழங்கப்படவுள்ளது.
ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம்
- அரசு அலுவலகங்களில் தமிழ்மொழியை முழுமையாகப் பயன்படுத்திட அரசுப் பணியாளர்களுக்கு அறிஞர்கள் குழுவால் ஆட்சிமொழி வரலாறு, சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்க அரசாணைகள் மற்றும் ஆட்சிமொழித் திட்டச் செயற்பாட்டில் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் களைதல், கணினியில் தமிழ் ஒருங்குறிப்பயன்பாடு என அனைத்துப் பொருண்மைகளிலும் ஆண்டுதோறும் பயிற்சி வகுப்புகள், ஆட்சிமொழிக் கருத்தரங்குகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட மூன்றாண்டுகளில் ரூபாய் 84 இலட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை நினைவூட்டி நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும் விழிப்புணர்வூட்டவும் மாவட்டங்கள் தோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் டிசம்பர் திங்கள் 21 முதல் 27 வரை ஒரு வாரக் காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கென ஒரு மாவட்டத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் வீதம் ரூபாய் 38 இலட்சம் செலவில் ஆண்டுதோறும் நடத்திட மூன்றாண்டுகளில் ரூபாய் ஒரு கோடியே 14 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
- தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் கடந்த மூன்றாண்டுகளில் 22 அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு நூலுரிமைத் தொகையாக ரூபாய் 2 கோடியே 85 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
- தனித்துவமிக்க தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 33 வகைப்பாடுகளில் சிறந்த படைப்புகளைப் படைத்த நூலாசிரியர்களுக்கும் பரிசுத்தொகையாக ரூ.30,000/-மும் அவற்றை வெளியிடும் பதிப்பகத்தாரர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.10,000/-மும் வழங்கப்படுகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் 137 நூலாசிரியர்களுக்கு ரூபாய் 39 இலட்சத்து 60 ஆயிரம் 132 பதிப்பகத்தார்களுக்கு ரூபாய் 13 இலட்சத்து 20 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கனவு இல்லம் திட்டம் வாயிலாக சாகித்திய அகாதெமி, ஞானபீட, தொல்காப்பியர், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது (தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு மட்டும்) மற்றும் நோபல் பரிசு இலக்கியம் (தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பணிகளுக்கு பெற்றிருப்பின்) ஆகிய விருதுகளைப் பெற்ற விருதாளர்களுக்கு கனவு இல்லம் வழங்கப்படுகிறது.
- 2021-2022ஆம் நிதியாண்டிற்கு 9 விருதாளர்களுக்கு 10 கோடியே 56 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 2022-2023ஆம் நிதியாண்டிற்கு 8 விருதாளர்களுக்கு 11 கோடியே 75 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கனவு இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருக்குறள் பரிசு
- ஆண்டுதோறும் திருக்குறள் முற்றோதல் (மனப்பாடம்) செய்யும் மாணவர்களில் 70 மாணவர்களுக்கு மட்டும் பரிசுத் தொகை வழங்குதல் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டு முற்றோதல் செய்யும் அனைவருக்கும் பரிசுத் தொகை ரூ.10,000/-லிருந்து ரூ.15,000/-ஆக உயர்த்தி கடந்த மூன்றாண்டுகளில் 451 மாணவச் செல்வங்களுக்கு ரூபாய் 63 இலட்சத்து 47 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
போட்டிகள்
- நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்திட ஆணையிடப்பட்டு, கடந்த மூன்றாண்டுகளில் போட்டிகள் நடத்தி பரிசுத்தொகை வழங்கிட ரூபாய் ஒரு கோடியே 90 இலட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
- பள்ளி மாணவர்களிடையே தமிழ் இலக்கியத் திறனை மேம்படுத்தும் வகையில் 11ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் திறனறித் தேர்வு நடத்திட ஆணையிடப்பட்டு, தெரிவு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக திங்கள்தோறும் ரூ.1,500/- வீதம் 22 திங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கென ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்திடவும், ஊக்கத்தொகை வழங்கிடவும் கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 8 கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
- கல்லூரி மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை அதிகரிக்க, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றங்கள் புதியதாக தோற்றுவித்து மாணவர்களிடையே தமிழ் சார்ந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தவும் ஒவ்வொரு கல்லூரிக்கும் வைப்புத்தொகையாக ரூபாய் 5 இலட்சம் வீதம் 100 கல்லூரிகளுக்கு ரூபாய் 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- கவிஞர் தமிழ்ஒளி பாரதியாரின் வழித்தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். அவரின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. 41 வயதில் இயற்கை எய்திய கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் 50 இலட்சம் வைப்பு நிதியிலிருந்து கவிஞர் தமிழ்ஒளியின் தெரிவு செய்யப்பட்ட கவிதைகளை ஒப்பித்தல் மற்றும் பேச்சுப்போட்டிகள் ஆண்டுதோறும் சுழற்சிமுறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்திட ஆணையிடப்பட்டு முதன்முறையாக கடலூரில் 27.07.2024 அன்று ரூ.3,25,000/- செலவில் நடத்தப்பெற்ற போட்டியில் 247 மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அவர்களின் மரபுரிமையர்களுக்கு திங்கள்தோறும் வாழ்நாள் முழுவதும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த மூன்றாண்டுகளில் 300 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், 1 எல்லைக் காவலர், 1 தமிழறிஞர், 48 எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்கள் மற்றும் 97 தமிழறிஞர்களின் மரபுரிமையர்கள் என மொத்தம் 447 பேருக்கு உதவித்தொகை ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
- அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அவர்களின் மரபுரிமையர்களுக்கு திங்கள்தோறும் வாழ்நாள் முழுவதும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த மூன்றாண்டுகளில் 300 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், 1 எல்லைக் காவலர், 1 தமிழறிஞர், 48 எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்கள் மற்றும் 97 தமிழறிஞர்களின் மரபுரிமையர்கள் என மொத்தம் 447 பேருக்கு உதவித்தொகை ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
- கல்லூரி மாணவர்கள் பயனுறும் வகையில் பல்வேறு துறையைச் சார்ந்த அறிஞர்களை அழைத்து ஒருவார காலம் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறையும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இலக்கிய வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டுவருகிறது. அவ்வகையில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பயிற்சி மாண்புமிகு தொழில்கள், தமிழ்ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களின் தலைமையிலும், 2023-2024ஆம் ஆண்டுக்கான பயிற்சி மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களின் தலைமையிலும் நடத்தப்பெற்றன. இதற்கென மொத்தம் ரூபாய் 40 இலட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட்டது.
- அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் பயனுறும் வகையில் 2023ஆம் ஆண்டில் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை புதியதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கென 38 மாவட்டத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் வீதம் ரூபாய் 38 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6,218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தி முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்திட ஒவ்வொரு பள்ளிக்கும் ரூபாய் 9,000/- வீதம் இதுவரை ரூபாய் 11 கோடியே 19 இலட்சத்து 24 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ் இலக்கியம் மற்றும் பிற பாடங்களைத் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழால் முடியும் என்ற தலைப்பில் 200 மாணவர்களுக்கு 24 அறிஞர்களை அழைத்து 3 நாட்கள் நடத்தப்படும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி நடத்திட ரூபாய் 31 இலட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டு 2022, 2023ஆம் ஆண்டுகளில் நடந்தேறியது.
இலக்கிய விழாக்கள் / கூட்டங்கள்
- தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணா அவர்களால் பெயர் சூட்டிய ஜூலை 18-ஆம் நாளினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “தமிழ்நாடு நாளாகக்” கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதற்கிணங்க ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2022ஆம் ஆண்டு சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றினார். 2023ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியிலும், 2024ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்திலும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் தலைமையில் நடத்தப்பெற்றன.
- தமிழ்நாடு நாள் விழாவின் ஓர் அங்கமாக அறிஞர்களை அழைத்து கருத்தரங்கம் நடத்தப்பட்டன. மேலும், தமிழ்நாடு நாள் விழா தொடர்பில் 38 மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட / மாநில அளவில் நடத்தப்பெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 28 இலட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் பரிசுகள் வழங்கப்பட்டன. அவ்வகையில், இதுவரை ரூபாய் 85 இலட்சத்து 65 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
- தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் பிறந்த நாளன்று உள்ளூர் இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து இலக்கியக் கூட்டங்கள் கடந்த மூன்றாண்டுகளில் 19 மாவட்டங்களில் ரூபாய் 23 இலட்சத்து 75 ஆயிரம் செலவில் நடத்தப்பட்டன.
பிற மாநிலம் / அயல்நாடுகளுக்கு நிதியுதவி வழங்குதல்
- அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக ரூபாய் 4 கோடி வழங்கப்பட்டது.
- ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த்துறை தொடர்ந்து செயற்படுவதற்கு ரூபாய் ஒரு கோடியே 25 இலட்சம் வழங்கப்பட்டது.
- புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்க 2022இல் ரூபாய் ஐந்து கோடியும். 2024இல் 38,99,896/-ம் வழங்கப்பட்டுள்ளது.
- நவி மும்பைத் தமிழ்ச் சங்கக் கட்டட மேம்பாட்டிற்கு ரூபாய் 75 இலட்சம் வழங்கப்பட்டது.
- ஒரிசா மாநிலத்தில் இயங்கி வரும் புவனேஸ்வர் தமிழ்ச் சங்கக் கட்டட விரிவாக்கப் பணிகளுக்கு ரூபாய் 15 இலட்சம் வழங்கப்பட்டது.
- மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 11.2021 அன்று எல்லைப் போராட்டத் தியாகிகள் 76 பேருக்கு சிறப்பு நேர்வாக ரூபாய் ஒரு இலட்சம் வீதம் ரூபாய் 76 இலட்சம் வழங்கப்பட்டது.
- தீராக் காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு ரூபாய் 25 இலட்சம் வழங்கப்பட்டது. முதல் நிகழ்வாக தமிழ் இணையக் கல்விக் கழகம் வாயிலாக உலகப் பொதுமறையான திருக்குறளில் குறளோவியம் என்ற தலைப்பில் இணைய வழியிலான ஓவியப் போட்டி மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் அவர்களால் 12.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 15.01.2022 அன்று வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ஓவியப் போட்டிக்கு வரப்பெற்ற ஓவியங்களுள் 365 ஓவியங்கள் தெரிவு செய்து தயாரிக்கப்பட்ட திருக்குறள் நாட்காட்டியும் வெளியிடப்பட்டது.
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வாயிலாக செயல்படுத்திடும் வகையில் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ் பரப்புரைக் கழகம் தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வாயிலாக தமிழ்மொழியின் பண்பாடு மற்றும் கலாச்சாரப் பரப்புரைப் பணிகள், ஒலி–ஒளி உச்சரிப்புடன் பாடப்புத்தகத்தை வடிவமைத்தல், தமிழ்க் கற்பதற்கான வசதிகள் ஏற்படுத்துதல், இணையத்தில் தமிழ் ஆசிரியர்கள் மூலம் கற்றுத்தருதல், தமிழை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல், தமிழாசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல், பயிற்சி பெற்ற ஆசிரியர்களை தமிழ் கற்பிக்க அனுப்பிவைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2023-2024ஆம் நிதியாண்டிற்கு ரூ.1.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வாயிலாக கணினி மற்றும் கைப்பேசிக்கேற்றவாறு பாடங்களை இணையதளப்படுத்துதல், ஒலிப்புத்தகம் உருவாக்குதல், காணொலிகள் உருவாக்கம், இணையவழிப் பல்லூடகப் பயிற்சி, ஒலி-ஒளி உச்சரிப்புடன் கூடிய பாடப்புத்தகம், கற்றல் மேலாண்மை செயலி உருவாக்கம், தமிழ் கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல், கலை-பண்பாடு மற்றும் மரபிசைப் பயிற்சிகள் அளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. - சங்க இலக்கிய நூல்களிலுள்ள வாழ்வியல் தத்துவங்கள், கருத்துகளை எழிலேடாக வெளியிட ரூபாய் 15 இலட்சம் வழங்கப்பட்டது.
- புகழ்பெற்ற தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் அரிய ஒலி/ஒளிப் பொழிவுகளை இணைய தளத்தில் பதிவேற்றிட தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு ரூபாய் 10 இலட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டது.
- சங்க இலக்கிய நூல்களைச் சந்திப் பிரித்து உரையுடன் தொகுப்பு நூலாக வெளியிட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனத்திற்கு ரூபாய் 10 இலட்சமும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு ரூபாய் 10 இலட்சமும் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பத்துப்பாட்டு நூல்கள் 06.01.2023 அன்றும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் குறுந்தொகை, பதிற்றுப்பத்து மற்றும் இறையனார் அகப்பொருள் நூல்கள் 18.01.2024 அன்றும் வெளியிடப்பட்டன.
- தந்தை பெரியார் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு–21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வாயிலாக வெளியிட ரூபாய் 29.05 இலட்சம் வழங்கப்பட்டு, முதற்கட்டமாக 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் 18.01.2024 அன்று வெளியிடப்பட்டன.
- பாரீசு பன்னாட்டு உயர்கல்வி நிறுவனம் மற்றும் செருமனி மூன்சென் தமிழ்ச் சங்கத்தில் நூலகங்களை அமைப்பதற்கு ரூபாய் 13 இலட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டது.
- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படைப்புகள் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து முதல் பத்து தொகுதிகள் வெளியிட ரூபாய் 51 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
- தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம், உத்தம்ம் நிறுவனம் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து 15.12.2022 முதல் 17.12.2022 வரை நடத்திய 21ஆவது தமிழ் இணைய மாநாட்டிற்கு ரூ.5,00,000/- வழங்கப்பட்டது.
- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாழும் 275 தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் சிறப்பு உதவித் தொகையாக ரூ.10,000 வீதம் வழங்கும் நிகழ்வு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் 01.2024 அன்று திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டு 275 பேருக்கு ஒருமுறை சிறப்பு உதவித்தொகை வழங்கிட ரூ.27,50,000/- வழங்கப்பட்டது.
- தாய்த் தமிழைக் காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில் சென்னை, மூலக்கொத்தளத்தில் ஏற்கனவே அமைந்துள்ள நினைவு மண்டபத்தினை மேம்படுத்தி பொலிவேற்றம் செய்திட ரூபாய் 34 இலட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- சங்கப்பெரும் புலவர் கணியன் பூங்குன்றனார் அவர்களின் நினைவாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மகிபாலன்பட்டியில் 276.75 சதுர அடி பரப்பளவில் ரூ.23.26 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட நினைவுத்தூண் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 22.01.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
- கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ரூபாய் 7 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் மார்பளவு சிலை நிறுவப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 27.02.2024 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
- சங்கப் பெரும்புலவர் கபிலர் நினைவாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ரூபாய் 13 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட நினைவுத்தூண் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் 07.03.2024 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
- கடந்த மூன்றாண்டுகளில் தமிழ் வளர்ச்சித் துறையின் 3 கண்காணிப்பாளர்களுக்கு உதவி இயக்குநர்களாகவும் 8 உதவி இயக்குநர்களுக்கு துணை இயக்குநர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறையில் நேரடி நியமனம் மூலம் நிறைவு செய்யப்படும் 13 உதவி இயக்குநர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வுகள் நடத்தி நிறைவு செய்திட ஆணையிடப்பட்டுள்ளது
- தமிழ் வளர்ச்சித் துறையில் தற்போது சேலம் மற்றும் திருநெல்வேலி என இரண்டு மண்டலங்கள் செயற்பட்டு வருகின்றன. நிருவாக வசதிக்காக மேலும் ஆறு மண்டலங்கள் துணை இயக்குநர்கள் பொறுப்பில் செயல்படும் வகையில் பிரிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தமிழ் வளர்ச்சித் துறையால் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்படும் திருவள்ளுவர் (மெரினா மற்றும் வள்ளுவர் கோட்டம்) (தை 2), உ.வே.சா (பிப்ரவரி 19), ஔவையார் (மார்ச் 8), கம்பர் (மார்ச் 24), இளங்கோவடிகள் (ஏப்ரல் 24), இராபர்ட் கால்டுவெல் (மே 7), மறைமலை அடிகள் (ஜூலை 15), திரு.வி.க.(ஆகஸ்ட் 26), தொல்காப்பியர் (சென்னை மற்றும் கன்னியாகுமரி)(சித்திரை முழுமதி நாள்), தமிழ்த்தாய் (நாள்தோறும் மாலையும் 15 நாட்களுக்கு ஒரு முறை நூல் புடைவையும்) ஆகிய 12 திருவுருவச் சிலைகளுக்கு விரைவுத் துலங்கள் குறியீடு (QR Code) அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பெற்று 2011ஆம் ஆண்டு வரை செயற்பட்ட அறிவியல் தமிழ் மன்றத்தை மீள புதுப்பொலிவுடன் செயற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெரு முயற்சியால் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ் மொழியானது 2004-ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
- 2008-ம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக சென்னையில் அமைக்கப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 5.11.2007 அன்று ரூ.42.66 கோடி மதிப்பிலான 586 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்நிலத்தினைச் சமன் செய்ய ரூ.1.45 கோடி நிதியும் வழங்கப்பட்டது.
- மாண்புமிகு தமிழ்நாடு மேனாள் முதல்வர் கலைஞர் அவர்கள் 24.07.2008 அன்று தம் சொந்த நிதியிலிருந்து அறக்கட்டளையை நிறுவி அவரின் பிறந்த நாளான சூன் 3 அன்று ஒவ்வோராண்டும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இவ்விருது 2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 10 ஆண்டுகளுக்குரிய விருதாளர்களாக முறையே முனைவர் வீ.எஸ். ராஜம், பேராசிரியர் பொன். கோதண்டராமன், பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி, பேராசிரியர் ப. மருதநாயகம், பேராசிரியர் கு. மோகனராசு, பேராசிரியர் மறைமலை இலக்குவனார், பேராசிரியர் கா. ராஜன், பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், கவிஞர் ஈரோடு தமிழன்பன் பேராசிரியர் கு. சிவமணி ஆகியோர் தெரிவு செய்யப்பெற்று முனைவர் வீ.எஸ். ராஜம், பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் நீங்கலாக ஏனையோருக்கு 22.01.2022 அன்று விருதுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- 2020ஆம் ஆண்டுக்கு முனைவர் ம. இராஜேந்திரன் அவர்களும் 2021ஆம் ஆண்டுக்கு முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களும், 2022ஆம் ஆண்டுக்கு பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் முனைவர் ழான் லூயிக் அவர்களும் தெரிவு செய்யப்பெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 22.08.2022 அன்று முனைவர் ம. இராஜேந்திரன் அவர்களுக்கும் முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
- 2023ஆம் ஆண்டுக்கான விருது திரு. கா. இராமசாமி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 5.09.2023 அன்று வழங்கப்பட்டது.
- கடந்த மூன்றாண்டுகளில் 15 அறிஞர்களுக்கு ரூ.1,50,00,000/- மதிப்பில் இவ்விருது வழங்கப்பட்டது.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைந்துள்ள சாலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செம்மொழிச் சாலை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அகராதிப்பணி வழியாக அருந்தமிழின் சொல்வளத்தைப் பாதுகாப்பதற்காக 1974ஆம் ஆண்டு தொடக்கி வைக்கப்பெற்ற செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தால், அரசு அலுவலகங்களுக்கான ஆட்சிச் சொல்லகராதி இக்காலத்திற்கேற்ப மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.
- தமிழ்நாட்டிலுள்ள 48 அரசுத் துறைகளுக்கான கலைச்சொல் குறுநூல்கள் அச்சிடப்பட்டு உரிய அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் 31 தொகுதிகள் இக்காலத்திற்கேற்ப மேம்படுத்தம் செய்யப்பெற்று 7 தொகுதிகளைக் கொண்ட திருந்திய பதிப்பு மற்றும் மருத்துவக் கலைச்சொல் அகராதி, பிறமொழியினருக்குப் பயன்படும் வகையில் பன்மொழி அகராதியுடன் கூடிய “தமிழ்ப்பேசி” குறுஞ்செயலி ஆகியன மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் ‘தமிழ் அகராதியியல் நாள் விழா’வில் வெளியிடப்பட்டன.
சொற்குவை வலைத்தளம்
- அகரமுதலி இயக்ககத்திற்கென உருவாக்கப்பட்ட ‘சொற்குவை’ வலைத்தளத்தில் (sorkuvai.tn.gov.in / sorkuvai.com) இவ்வியக்ககப் பேரகரமுதலி, சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி, தமிழ் இணையக் கல்விக்கழக கலைச்சொல் அகராதி மற்றும் தமிழ்நாடு அரசின் ஆட்சிச்சொல் அகராதி உள்ளிட்ட அகராதிகளிலிருந்து தொகுக்கப்பெற்ற சொற்களையும் சேர்த்து 2024 சூலை திங்கள் வரை 15,32,717 சொற்கள் பதிவேற்றம் செய்யப்பெற்றுள்ளன.
தமிழ்க் கலைக்கழகம்
- கடந்த மூன்று ஆண்டுகளில் மாதம் இரு கூட்டங்கள் என்ற வகையில் 68 கூட்டங்கள் நடத்தப்பெற்று, 16,935 கலைச்சொற்களுக்கு வல்லுநர்குழு ஏற்பளித்து ‘சொற்குவை’ வலைத்தளம் வழியாக மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்தோ – ஐரோப்பிய வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி
- இந்தோ – ஐரோப்பிய வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் உருவாக்கி வெளியிட ஆணையிடப்பட்டு, மொத்தம் ரூ.5,47,20,000/- வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- ‘தமிழ் அகராதியியலின் தந்தை’ என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் பிறந்தநாளான நவம்பர் 08ஆம் நாள் ஆண்டுதோறும் “தமிழ் அகராதியியல் நாள் விழாவாக”க் கொண்டாடப்பட்டு வருகிறது.
- தூயதமிழ் பேசும் தனித்தமிழ்ப் பற்றாளர்களுக்குத் தொகை ரூ.5,000/- வீதம் மூவருக்கு ரூ.15,000/- வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 9 அறிஞர்களுக்குத் தொகை ரூ.45,000/- வழங்கப்பட்டுள்ளது.
- பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் நடைபெறும் ஓவியப்போட்டி மற்றும் கலைச்சொல்லாக்கப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு முதற்பரிசாக ரூ.10,000/-, இரண்டாம் பரிசாக ரூ. 5,000/- என கடந்த மூன்றாண்டுகளில் 12 மாணவர்களுக்குத் தொகை 90,000/- வழங்கப்பட்டுள்ளது.
- அகராதித் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிவரும் தகுதிவாய்ந்த உள்நாட்டு அகராதியியல் அறிஞர் ஒருவருக்குத் ‘தேவநேயப் பாவாணர் விருதும்’, விருதுத் தொகையாக ரூ.2 இலட்சமும், 1 சவரன் தங்கப் பதக்கமும், வழங்கப்பட்டுவருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 3 அறிஞர்களுக்குத் தொகை ரூ. 7,50,000/- வழங்கப்பட்டுள்ளது.
- வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கி, தமிழ் அகராதித்துறையில் சிறந்து விளங்கி, தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள வெளிநாடு (அ) உள்நாட்டைச் சார்ந்த அகராதியியல் அறிஞர் ஒருவருக்கு ‘வீரமாமுனிவர் விருதும்’, விருதுத் தொகையாக ரூ.2 இலட்சமும், 1 சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டுவருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் ஓர் அறிஞருக்குத் தொகை ரூ. 2,50,000/- வழங்கப்பட்டுள்ளது.
- தூயதமிழ்ச் சொற்களைக் கொண்டு செய்திகளை வெளியிடும் ஊடகங்களை ஊக்குவிக்கும் வகையில், அச்சு மற்றும் காட்சி என இரு ஊடகங்களுக்குத் ‘தூயதமிழ் ஊடக விருதும்’, விருதுத் தொகையாக ரூ.50 ஆயிரமும், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கமும், வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் 2 அச்சு ஊடகங்களுக்கும், ஒரு காட்சி ஊடகத்திற்கும் சேர்த்து தொகை ரூ. 2,25,000/- வழங்கப்பட்டுள்ளது.
- தூயதமிழ்ச் சொற்களைக் கொண்டு கவிதை இயற்றும் பாவலர்களை ஊக்குவிக்கும் வகையில் மரபுக்கவிஞர் மற்றும் புதுக்கவிஞர் என இரண்டுபேருக்கு ‘நற்றமிழ்ப் பாவலர் விருதும்’, விருதுத் தொகையாக ரூ.50 ஆயிரமும், ரூ. 25ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் 6 அறிஞர்களுக்குத் தொகை ரூ. 4,50,000/- வழங்கப்பட்டுள்ளது.
- நடைமுறை வாழ்க்கையில் பிறமொழிக் கலப்பின்றித் தூயதமிழில் பேசுவோரை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் ஒருவருக்குத் “தூயதமிழ்ப் பற்றாளர் விருதும்” விருதுத்தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 69 அறிஞர்களுக்குத் தொகை ரூ. 13,80,000/-வழங்கப்பட்டுள்ளது.
- அகராதியியல், மொழியியல் சார்ந்த கட்டுரைகள், வெளிநாடு மற்றும் உள்நாட்டு அறிஞர்களின் சொல்லாய்வுகள், சொல்லாக்கங்கள், இயக்கக நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகளைக் கொண்ட “சொல்வயல்” மின்னிதழ் 2024 சூலை வரை 50 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
படைப்பாக்கப் பொது உரிமத்தில் வெளியிடல்
- சொற்குவையின் சொற்கள், தமிழ் மின் நூல்கள், அரசுத் தளங்களின் உள்ளடக்கங்கள், அகரமுதலி இயக்கக வெளியீடுகள் போன்றவை விக்கிப்பீடியா (Wikipedia), விக்கிமூலத்தில் (Wikisource) படைப்பாக்கப் பொது உரிமத்தின்கீழ் தரவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சொல்வயல் மின்னிதழில் மாதந்தோறும் இடம்பெறும் கலைச்சொற்கள் “விகாஸ்பீடியா” (Vikaspedia) இணையதளம் வழியாக மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சித் திட்டம்
- கல்லூரி மாணவர்களிடையே சொல்லாக்கத் திறனை வளர்த்தெடுத்து அவர்களின் தனித்தமிழ்ப் பற்றினை ஊக்குவிக்கும் நோக்கில் ‘சொற்குவை மாணவத் தூதுவர் பயிற்சித் திட்டம்’ செயற்படுத்தப்பட்டுவருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 600 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல துறைசார்ந்த சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்க, தேர்ந்த அறிஞர்களைக் கொண்டு பயிற்சி அளித்து அவர்களை பேச்சிலும் எழுத்திலும் தனித்தமிழைப் பயன்படுத்த ஊக்குவிக்க
ரூ. 6,13,800/- வழங்கப்பட்டது.
- பேரறிஞர் அண்ணா அவர்கள் பிரெஞ்சு மொழிக் கலைக் கழகத்தைப் போல தமிழுக்கு ஓர் உயராய்வு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற கருத்திற்கிணங்க,
1970-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பெற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு கடந்த மூன்றாண்டுகளில் ஊதியம், திட்டப்பணிகள் மற்றும் ஓய்வூதியத்திற்கென நல்கை மானியமாக ரூபாய் 12 கோடியே 67 இலட்சத்து 23 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. - முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் முதல் நூலாக அயல்நாட்டு அறிஞர் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் எழுதிய “A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages” என்னும் நூல் பேராசிரியர்
பா.ரா. சுப்பிரமணியன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக அச்சிடப்பெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 16.02.2022 அன்று வெளியிடப்பட்டது. - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க பாரதியின் வாழ்வைச் சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக் கதை நூல், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களைத் தெரிவு செய்து தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவிய நூல், மற்றும் பாரதியாரின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களின் ஆங்கில மொழிபெயப்பு நூல்கள் வெளியிடப்பட்டன.
- திருக்குறள் நெறிபோற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற 15 ஓவியர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசாக ரூ.40 ஆயிரமும் வழங்கிட ரூபாய் 6 இலட்சமும் ஓவியங்களைக் காட்சிப்படுத்திட ரூபாய் 4 இலட்சமும் என மொத்தம் ரூபாய் 10 இலட்சம் வழங்கப்பட்டன.
- ஓமரின் ‘இலியட்’ மற்றும் ‘ஒடிசி’ ஆகிய கிரேக்கக் காப்பியங்கள் ரூ.9.10 இலட்சம் நிதி நல்கையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் 12.07.2023 அன்று வெளியிடப்பட்டன.
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு நூலகம் ரூபாய் 50 இலட்சம் செலவில் கணினிமயமாக்கி மேம்படுத்தப்பட்டுள்ளது.
- பெருநகரச் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி (ம) நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான “மொழியியல் நுணுக்கப் பயிற்சி அளிக்க ரூபாய் 2.95 இலட்சம் வழங்கப்பட்டது.
- பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் மற்றும் சிறார் இலக்கியங்களில் தெரிவு செய்யப்பட்ட நூல்களை ஒலி நூல்களாக மாற்றம் செய்து ரூபாய் 10 இலட்சம் செலவில் வெளியிடப்பட்டது.
- கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, நிறுவனத்தில் ‘கவிஞர் தமிழ்ஒளி படைப்புவெளி’ எனும் பொருண்மையில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டு 35 கட்டுரையாளர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது.
- பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பெற்று முத்தமிழறிஞர் கலைஞருடைய ஆட்சிக்காலங்களில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கென்று பேராசிரியர் ஒருவரை இயக்குநராக நியமிக்கின்ற மரபு கடைபிடிக்கப்பட்டுவந்தது. அதற்குப் பிறகு அம்மரபு பின்பற்றப்படவில்லை. தற்போது கழக அரசால் மீண்டும் இயக்குநர் பதவிக்கு பேராசிரியர் நிலையில் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- உலகத் தமிழர்களையும், தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைக்கும் வகையில் 1986ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற உலகத் தமிழ்ச் சங்கத்தின் பணிகள் சிறப்பாக நடைபெறும் வகையில், கடந்த மூன்றாண்டுகளில் நல்கை மானியமாக ரூபாய் 3 கோடியே 62 இலட்சத்து 12 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
- சங்க கால இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை தமிழாய்ந்து பேசும் அறிஞர்கள் ஒன்று கூடும் நிகழ்வு வாரந்தோறும் ‘தமிழ்க்கூடல்’ என்னும் பெயரில் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 8 இலட்சத்து 13 ஆயிரம் செலவில் 65 தமிழ்க்கூடல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
- திங்கள்தோறும் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் விதமாக, தமிழ் நூல்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் ஒரு இலட்சத்து 28 ஆயிரம் செலவில் 16 நூல் அரங்கேற்ற நிகழ்வுகள் நடத்தப்பெற்று, 81 நூல்கள் அரங்கேற்றம் செய்யப் பெற்றுள்ளன.
- உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பன்னாட்டுக் கருத்தரங்கங்களை நடத்தி வருகின்றன. அவ்வகையில், குறிஞ்சித் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையத்துடன் இணைந்து ‘சிங்கப்பூர்த் தமிழறிஞர் மு.தங்கராசனின் படைப்புகள்’ என்ற பன்னாட்டுக் கருத்தரங்கமும் ஐயை உலகத் தமிழ் மகளிர் மன்றத்துடன் இணைந்து ‘புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல்’ என்ற பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்தப்பெற்றன.
- இரண்டு தேசியக் கருத்தரங்கங்களும் நடத்தப்பெற்று இருக்கின்றன. திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து ‘செந்தமிழும் சேரநாடும்’ என்ற தேசியக் கருத்தரங்கமும் கேரள தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றத்துடன் இணைந்து ‘வானவில் கே. ரவியின் படைப்புலகம் – ஒரு பன்முகப் பார்வை’ என்ற தேசியக் கருத்தரங்கமும் நடத்தப்பெற்றன.
- உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஐந்து அறக்கட்டளைகள் நிறுவப்பெற்றுள்ளன. அந்த அறக்கட்டளைகளின் சார்பில் கடந்த மூன்றாண்டுகளில் 5 சொற்பொழிவுகள் நடத்தப்பட்டுள்ளன.
- கடந்த மூன்றாண்டுகளில் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட 350க்கும் மேற்பட்ட இதழ்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட அயலகத் தமிழ் நூல்கள் உலகத் தமிழ்ச் சங்க நூலகத்தில் ‘அயலகத் தமிழ்ப் புத்தகப் பூங்கா’ என்ற தனிப்பிரிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
- உலகத் தமிழ்ச் சங்கத்தில் 30,000க்கும் மேற்பட்ட நூல்களுடன் குளிரூட்டப்பட்ட வசதியுடன் 200 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் நூலகம் இயங்கி வருகிறது. நூலகத்தினைப் புனரமைக்க ரூபாய் 21 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
- உலகத் தமிழ்ச் சங்கத்தில் 119 அயலகத் தமிழ் அமைப்புகளும், 26 வெளி மாநிலத் தமிழ் அமைப்புகளும் 145 தமிழகத் தமிழ் அமைப்புகளும் என மொத்தம் 290 தமிழ் அமைப்புகள் உறுப்பினர்களாக கடந்த மூன்றாண்டுகளில் இணைந்துள்ளன.
- தமிழ் மொழியின் இலக்கிய, இலக்கணச் செழுமையை எடுத்துரைக்கும் வகையில், 100 பேர் பங்கேற்ற ‘இலக்கியம், இலக்கணம் அறிவோம்’ கட்டணமில்லாப் பயிற்சி வகுப்பு 15 நாள்கள் நடத்தப்பெற்றது.
- உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மூன்றாண்டுகளில் ‘பன்முக நோக்கில் மக்கள்திலகம்’, ‘புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல்’, ‘பொன்மனச் செம்மல் – ஒரு பன்முகப் பார்வை’, ‘செந்தமிழும் சேரநாடும்’, ‘பாரெங்கும் பாரதி’, ‘சமுதாய மாற்றத்திற்குத் தமிழ்த் திரையுலகின் பங்களிப்பு’ உள்ளிட்ட 7 நூல்கள் வெளியிடப்பெற்றுள்ளன.
- மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சங்கத் தமிழ்க் காட்சிக் கூடத்தினைப் புனரமைக்கும் பணிகள் ரூபாய் 12.50 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- சங்கத் தமிழ்க் காட்சிக்கூடத்தை பலர் அறியும்வண்ணம் கொண்டு செல்லும் நோக்கத்தில் திங்கள்தோறும் சிறப்புச் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற ஓவியப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பெற்று மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
தொகுப்பு நல்கை
- தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் 1981ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் நாளில் உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கல்விநிலை மற்றும் அலுவல்நிலைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காகவும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்காகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் தொகுப்பு நல்கையாக ரூபாய் 115 கோடியே 05 இலட்சத்து 99 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
- கடந்த மூன்று ஆண்டுகளில், 249 முனைவர் பட்ட மாணவர்களும், 45 ஆய்வியல் நிறைஞர் மாணவர்களும், முதுநிலைப் பட்டப்படிப்பில் 450 மாணவர்களும் ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்பில் 326 மாணவர்களும் இளங்கல்வியியல் பட்டப்படிப்பில் 282 மாணவர்களும் கல்வியியல் நிறைஞர் பட்டப்படிப்பில் 4 மாணவர்களும் சேர்க்கைப் பெற்றுள்ளனர்.
கல்வி உதவித்தொகை
- முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் 20 பேர் மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் 25 பேருக்கும் திங்கள்தோறும் ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) உதவித்தொகை வழங்குவதற்காக கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 88 இலட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் பண்பாட்டு மையம்
- தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாத்து உலகெங்கும் பரப்புவதற்குத் தமிழ்ப் பண்பாட்டு மையம் அமைத்து அதன்வழியாக இசை, நாட்டியம் மற்றும் மரபுக்கலையில் படிநிலை வகுப்புகள் நடத்துவதற்காக வெளிநாடு மற்றும் உள்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் 30 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 3563 மாணவர்கள் சேர்க்கை செய்யப்பெற்று பயின்றுவருகின்றனர்.
தமிழ் வளர் மையம்
- உலகளவில் தமிழ் மொழியினைப் பரப்புவதற்காகவும், அதனைப் பாதுகாக்கவும் தமிழ் வளர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின்வழி இளங்கலை, முதுகலை, பட்டய மற்றும் சான்றிதழ் வகுப்புகள் நடத்துவதற்கு கடந்த மூன்றாண்டுகளில் 10 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதன் மூலம் சுமார் 780 மாணவர்கள் சேர்க்கை செய்யப்பெற்றுள்ளனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள்
வ.உ.சிதம்பரனார் இணையவழிக் கருத்தரங்கம்
- தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ.சிதம்பரனார் அவர்கள் குறித்த இணையவழிக் கருத்தரங்கம் ரூ.2,00,000/- செலவில் 30 நாட்கள் நடத்தப்பெற்றன.
தமிழ் இலக்கியங்கள் உலக மொழிகளில் மொழிபெயர்த்தல்
- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சங்கத்தமிழ் நூலினைப் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.12 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பண்பாட்டு மரபுகளை ஆவணப்படுத்துதல்
- தமிழ்ப் பண்பாட்டு மரபுகள், தமிழ் மண்ணின் மரபுக்கலைகளை மீட்டெடுத்தல், நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம் அமைத்தல், கல்வெட்டுகள் காட்டும் தமிழ்க் கலைப் பண்பாடுக் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளுதல், கைவினைப் பொருட்கள் தயாரித்திடப் பயிற்சிகள் அளித்தல் ஆகிய திட்டப் பணிகள் மூன்று ஆண்டுகளில் மேற்கொள்வதற்கு ரூ.2.11 கோடிக்கு நிருவாக அனுமதி அளித்து ரூ.91,33,500/- வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குத் தேசியத் தரமதிப்பீட்டுப் புள்ளிகள் பெறுதல்
- தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் மறு மதிப்பீட்டிற்கு உட்படுத்தி உயர்புள்ளிகளைப் பெறும் வகையில் கட்டடங்கள் மேம்பாட்டுப் பணிகள், அலுவலகக் கட்டடம், நூலகக் கட்டடம், கூத்துக்களரி வளாகம், ‘த’ மற்றும் ‘நா’ வடிவக் கட்டடங்கள் சிறப்புச் சீர்காப்புப் பணிகளுக்கான ரூ.1.50/- கோடியும், ஆய்வுத்திட்டம் மேற்கொள்வதற்காக ரூ.50.00 இலட்சமும் என மொத்தம் ரூ.2.00 கோடி வழங்கப்பட்டுள்ளது.
யோகாப் பயிற்சி மையம்
- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் யோகா மையம் அமைக்கப்பட்டு அதன்வழி அருகில் உள்ள அரசுப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகளுக்குரிய அரசுப் பள்ளிகள், தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள், சுமார் 400 மாணவர்களுக்கு யோகாப் பயிற்சிகள் அளிக்க ரூ.1,50,000/- வழங்கப்பட்டுள்ளது.
புதிய கட்டடங்கள்
- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ரூ. 5,03,57,000/- (ரூபாய் ஐந்து கோடியே மூன்று இலட்சத்து ஐம்பத்தேழாயிரம் மட்டும்) மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாமன்னன் இராசராசச் சோழன் பன்னோக்குக் கூடம், உள்விளையாட்டு அரங்கம், கூடுதல் மகளிர் விடுதி, பழைய ஆடவர் விடுதி முதல் தளம் மற்றும் குறளோவியம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஒலி-ஒளிப் பதிவுக்கூடம் ஆகியவை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் 07.03.2024 அன்று காணொலி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்டன.
தமிழ் வளர்ச்சித் துறைக்கான புதிய அறிவிப்புகள் (2024-2025)
- 2025 ஆம் ஆண்டு முதல் ஜனவரித் திங்கள் 25-ஆம் நாளினை “தமிழ்மொழித் தியாகிகள் நாளாக” கடைபிடிக்கப்படும்.
- 2025ஆம் ஆண்டு முதல் ஜூன் 3ஆம் நாளினை ’செம்மொழிநாள் விழா’-வாகக் கொண்டாடப்படும்.
- முனைவர் ஆறு. அழகப்பன், முனைவர் இராமலிங்கம் (எ) எழில் முதல்வன் மற்றும் நினைவில் வாழும் தமிழறிஞர்களான முனைவர் சோ. சத்தியசீலன், முனைவர் மா. ரா. அரசு, பாவலர் ச. பாலசுந்தரம், முனைவர் க.ப. அறவாணன், முனைவர் க.த. திருநாவுக்கரசு, முனைவர் இரா. குமரவேலன், கவிஞர்
கா. வேழவேந்தன் ஆகியோரின் நூல்கள் ரூபாய் 91 இலட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் நாட்டுடைமையாக்கப்படும். - சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பெற்ற சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியருக்கு ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து ரூபாய் 50 ஆயிரமாகவும் அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாகவும் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
- கவிஞர் முடியரசன் அவர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் ரூபாய் 50 இலட்சம் செலவில் திருவுருவச் சிலை நிறுவப்படும்.
- தமிழினத் தலைவர் என்று தமிழ்நாடு மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் அன்பாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் வகையில் புதிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
- சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணிகளுக்கு ரூபாய் 50 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
- டெல்லி தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தினைப் புனரமைக்க ரூபாய் 50 இலட்சம் வழங்கப்படும்.
- உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழின் மிகச்சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்களிலும், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய இவ்வாண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும். இம்முயற்சிக்கு ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- கனவு இல்லம் திட்டத்தின் நீட்சியாக, தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் விருதாளர்களுக்கு தமிழ்நாடு அரசால் வீடு வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.