மூன்றாண்டு சாதனைகள்

தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு, செய்தி மற்றும் விளம்பரம்,திரைப்படத் தொழில்நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்

தமிழ் வளர்ச்சித் துறை

  • முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1971ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ் வளர்ச்சி இயக்ககம் வாயிலாக தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் தைத்திங்கள் 2ஆம் நாள் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படும் திருவள்ளுவர் விருது. பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகிய விருது பெறும் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருதுத் தொகை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ரூபாய் ஒரு இலட்சத்திலிருந்து ரூபாய் இரண்டு இலட்சமாக உயர்த்தப்பட்டு கடந்த மூன்றாண்டுகளில் 21 அறிஞர்களுக்கு மொத்தம் ரூபாய் 54.60 இலட்சம் வழங்கப்பட்டது.
  •  ஆண்டுதோறும் கபிலர் விருது, கம்பர் விருது, உ.வே.சா. விருது, சொல்லின் செல்வர் விருது, ஜியு போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, முதலமைச்சர் கணினித் தமிழ் விருது, அம்மா இலக்கிய விருது, காரைக்கால் அம்மையார் விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (10), சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது, அயோத்திதாசப் பண்டிதர் விருது, மறைமலை அடிகாளர் விருது, அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது, உலகத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக வழங்கப்படும் இலக்கிய விருது, இலக்கண விருது, மொழியியல் விருது ஆகிய விருது பெறும் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுவந்த விருதுத்தொகை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ரூபாய் ஒரு இலட்சத்திலிருந்து ரூபாய் இரண்டு இலட்சமாக உயர்த்தப்பட்டு கடந்த மூன்றாண்டுகளில் 51 அறிஞர்களுக்கு மொத்த தொகையாக ரூபாய் ஒரு கோடியே 33 இலட்சத்து 11 ஆயிரம் வழங்கப்பட்டது.
  • தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் 38 மாவட்டங்களிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதுகள் நாளிதுவரை 76 அறிஞர்களுக்கு வழங்கிட ரூபாய் 22 இலட்சத்து 80 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் தமிழமைப்புகளை நிறுவி தமிழ்த்தொண்டாற்றும் சீரிய அமைப்புகளுக்கு தமிழ்த்தாய் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. மூன்றாண்டுகளில் ரூபாய் 12 இலட்சம் வழங்கப்பட்டது.
  • திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பாக, கடந்த மூன்றாண்டுகளில் 35 இனங்களில் 254 விருதாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருது

  • மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டினை முன்னிட்டு அவரது வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த 6 அறிஞர்களுக்கு 2021ஆம் ஆண்டில் சிறப்பு நேர்வாக வழங்கப்பட்ட பாரதி நினைவு நூற்றாண்டு விருதுக்கென ரூ.18.60 இலட்சம் வழங்கப்பட்டது.

புதிய விருதுகள்

  • முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 03.06.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் மூன்று அறிஞர்களுக்கு இலக்கிய மாமணி என்ற பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு விருதாளர் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.5 இலட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டு மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நேர்வாக கூடுதலாக மூன்று அறிஞர்கள் தெரிவு செய்யப்பெற்ற வகையில் மூன்றாண்டுகளில் 12 அறிஞர்களுக்கு விருது வழங்கிட ரூபாய் 61.30 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
  • கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் 150ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பெயரில் புதிய விருது தோற்றுவிக்கப்பட்டு முதன் முறையாக
    திரு. எண்ணரசு கருநேசன் அவர்களுக்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் வழங்கப்பட்டது.
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2021ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தகைசால் தமிழர் விருது திரு. ந. சங்கரய்யா, திரு. இரா. நல்லகண்ணு மற்றும் திரு. கி. வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பெற்றது. பொதுத் துறை வாயிலாக வழங்கப்பட்ட இவ்விருது 2024ஆம் ஆண்டுமுதல் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கிடவும் விருதுத்தொகையாக ரூபாய் 10 இலட்சம் நிதியொப்பளிப்பு செய்தும் ஆணையிடப்பட்டு 2024ஆம் ஆண்டுக்கு இலக்கியச் செல்வர் திரு. குமரி ஆனந்தன் அவர்களுக்கு விடுதலைத் திருநாள் அன்று வழங்கப்படவுள்ளது.